கனடா கியூபெக் பிரிவினைவாதிகள் வாக்கெடுப்பில் வெற்றி, பொது வாக்கெடுப்புக்கு வாக்குறுதி


கனடாவின் கியூபெக் மாகாணத்தில் திங்களன்று நடைபெற்ற தேர்தலில், கனடாவிலிருந்து கியூபெக் சுதந்திரம் பெறுவது குறித்து புதிய பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்துள்ள பிரிவினைவாத பார்ட்டி கியூபெக்வா (PQ) அதிக இடங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான முழுமையான பெரும்பான்மையை அந்தக் கட்சி பெறவில்லை.

49 வயதான பால் செயிண்ட்-பியர் பிளமண்டன் தலைமையிலான PQ, மொத்தம் 127 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் சுமார் 60 இடங்களைப் பெறும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவைப்படும் நிலையில், PQ சிறுபான்மை அரசாங்கமாக ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சட்டங்களை நிறைவேற்றவும், நம்பிக்கை வாக்கெடுப்புகளில் வெற்றி பெறவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு PQ அரசாங்கத்துக்குத் தேவைப்படும்.

மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுதான் கியூபெக் மக்கள் பார்ட்டி கியூபெக்வாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்தச் செய்தியை நான் கேட்டேன்,” என்று PQ தலைவர் பால் செயிண்ட்-பியர் பிளமண்டன் தெரிவித்தார்.

ஒரு தசாப்தத்துக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு PQ மீண்டும் ஆட்சிக்கு வருவது, கியூபெக்கின் பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் அடையாளம் மற்றும் மாகாணத்தின் எதிர்காலம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. கியூபெக்கின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள்.

கியூபெக்கை ஒரு தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தை வலியுறுத்திய செயிண்ட்-பியர் பிளமண்டன், பொது வாக்கெடுப்பு மூலம் கியூபெக் மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க முடியும் என்று கூறினார்.

நான் தொடர்ந்து அந்த நாட்டைப் பற்றிக் கனவு காண்கிறேன், அதைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்தக் கனவு ஒரு நாள் நனவாகும் என்று அவர் தனது வெற்றி உரையில் தெரிவித்தார்.

எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருக்கும் காலத்தில் கியூபெக் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படாது என அவர் தெளிவுபடுத்தினார். இந்த விவகாரம் “விவேகமான மற்றும் அமைதியான விவாதம் மூலம் அணுகப்பட வேண்டும் என்றும், “கணிக்க முடியாத ஒரு அதிபரின் நாடகங்களால் அது திசைதிருப்பப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

சுதந்திரத்துக்கு தற்போதைய ஆதரவு

PQ-வின் தேர்தல் வெற்றி, கியூபெக் சுதந்திரத்துக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நேரடியாகக் குறிக்கவில்லை.

1995ஆம் ஆண்டு நடைபெற்ற கடைசி சுதந்திர வாக்கெடுப்பில், 50.58 சதவீத வாக்காளர்கள் மட்டுமே கனடாவுடன் இணைந்திருக்க ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, சமீபத்திய கருத்துக்கணிப்புகள் கியூபெக் இறையாண்மைக்கான ஆதரவு சுமார் 30 சதவீதமாக இருப்பதாகக் காட்டுகின்றன.

19 வயதான அலெக்ஸியா கோமஸ், கியூபெக் சுதந்திரம் பெற்றால் அது அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக மாகாணத்தை பாதிப்புக்குள்ளாக்கக்கூடும் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளும் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், PQ-வின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளால் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.

இதனிடையே, கியூபெக் மக்களிடையே வரவேற்பைப் பெறக்கூடிய மற்றொரு நடவடிக்கையாக, பிரிட்டிஷ் முடியாட்சியுடனான கியூபெக்கின் உறவுகளை குறைக்கவும் PQ உறுதியளித்துள்ளது.

கனடாவிலிருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்புக்கான செயல்முறையைத் தொடங்குவதை ஆதரிப்பதா என்பதை ஆல்பர்ட்டா வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ள நிலையில், அதற்கு சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கியூபெக் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது.

No comments